Archive for June 2011

பனை ஓலை கொழுக்கட்டை


தேவையானப்பொருட்கள்:

பனை ஓலை(நடுப்பகுதி)- 10 முதல் 15 துண்டுகள் (ஆறு அங்குல நீளம்)
பச்சரிசி மாவு - 3 கப்
கருப்பட்டி அல்லது வெல்லத்தூள் - 2 கப்
ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
சுக்குப்பொடி - 1/2 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 1 கப்
செய்முறை:

கருப்பட்டியில் அரைக்கப் தண்ணீரைச் சேர்த்து காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும்.

பச்சரிசி மாவுடன் ஏலக்காய் தூள்,சுக்குப்பொடி, தேங்காய்த்துருவல், கருப்பட்டி நீர் ஆகியவற்றைச் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும். மாவு மிகவும் கெட்டியாக இல்லாமல் சிறிது குழைவாக உள்ளவாறு நீர் விட்டுப் பிசைந்து கொள்ளவும். 

ஒரு ஓலையை விரித்து நடுவில் மாவை வைத்து, ஓலை அளவிற்கு நீளமாக அழுத்தி, மூடவும். ஓலை பிரிந்து விடாமல் இருக்க ஒரு நார் அல்லது நூல் கொண்டு கட்டி வைக்கவும்.



இதேபோல் மீதமுள்ள மாவு அனைத்தையும் தயார் செய்து இட்லி தட்டில் வைத்து 15 அல்லது 20 நிமிடங்கள் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

சற்று ஆறியபின், ஓலையைப் பிரித்து கொழுக்கட்டையைத் தனியாக எடுத்து வைக்கவும். 

இந்தக் கொழுக்கட்டை, திருக்கார்த்திகைத் தினத்தன்று, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் செய்யப்படும் ஒரு சிறப்பு பலகாரம்

கார்த்திகை அப்பம்


தேவையானப்பொருட்கள்:

அரிசிமாவு - 1 கப்
வெல்லப்பொடி - 1/2 முதல் 3/4 கப் வரை
நன்கு கனிந்த வாழைப்பழம் - 1
பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் - 1 அல்லது 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:

1/2 கப் தண்ணீரில் வெல்லத்தைப் போட்டு கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

வாழை பழத்தை நன்றாக மசித்துக் கொள்ளவும்.

அரிசிமாவு, மசித்த வாழைப்பழம், தேங்காய்த் துண்டுகள், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, அதில் வெல்ல நீரை விட்டு இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். தேவையானால் சிறிது நீரையும் சேர்த்துக் கொள்ளலாம்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் அதில் ஒரு டேபிள்ஸ்பூன் மாவை எடுத்து ஊற்றவும். பொன்னிறமாக சிவக்கும் வரை பொரித்து எடுக்கவும்.
குறிப்பு: அரிசிமாவிற்குப்பதில், மைதா அல்லது கோதுமை மாவிலும், ரவாவிலும் கூட இந்த அப்பத்தை செய்யலாம். அல்லது எல்லா மாவிலும் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்தும் செய்யலாம். வெல்லத்திற்கு பதில் சர்க்கரையையும் பயன் படுத்தலாம். அப்பம் வெள்ளையாக இருக்கும்.

மேலும், இதை எண்ணையில் பொரித்தெடுப்பதற்குப் பதில், குழிப்பணியாரச் சட்டியிலும் பணியாரம் செய்வதுபோல் சுட்டெடுக்கலா
ம்

கார்த்திகை பொரி


தேவையானப்பொருட்கள்:


அவல் பொரி - 8 கப்
வெல்லம் பொடிசெய்தது - 2 கப்
பொட்டுகடலை - 1 கப்
தேங்காய் - ஒரு மூடி
ஏலக்காய்த் தூள் - 1 டீஸ்பூன்
சுக்குப்பொடி - 1/2 டீஸ்பூன்


செய்முறை:


தேங்காயை சிறு துண்டுகளாக வெட்டி வெறும் வாணலியில் போட்டு சிறிது சிவக்கும் வரை வறுத்தெடுக்கவும்.


பொரியை நன்றாக புடைத்து அல்லது சலித்து, சுத்தம் செய்து கொள்ளவும்.


சுத்தம் செய்த பொரி, பொட்டுக்கடலை இரண்டையும் ஒன்றாகக் கலந்துக் கொள்ளவும்.


அடி கனமான ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு அத்துடன் 1/2 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கொதிக்க ஆரம்பித்ததும், அதை வடிகட்டி வேறொரு பாத்திரத்தில் ஊற்றி கெட்டி பாகு காய்ச்சவும். சிறிது பாகை தண்ணீரில் விட்டால், அது கரையாமல் அப்படியே கெட்டியாக இருக்கும். அதை கைகளால் எடுத்து உருட்டினால் உருட்ட வரும். இதுதான் சரியானப் பதம். இப்பொழுது அதில் ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி, தேங்காய்த்துண்டுகள் ஆகியவற்றைச் சேர்த்து கிளறி, கீழே இறக்கி வைக்கவும்.


உடனே அதில் பொரியைக் கொட்டை நன்றாகக் கிளறி விடவும். பொரி சூடாக இருக்கும் பொழுதே உருண்டைப் பிடிக்கவும். ஆறினால் பிடிக்க வராது.


உருண்டை பிடிக்க வரவில்லை என்றால், அப்படியே உதிரியாக விட்டி விடவும். இதுதான் கார்த்திகைப் பொரி.


குறிப்பு: நெல்பொரியிலும் மேற்கண்டப் பொரியைச் செய்யலாம். நெல் பொரி, அவல் பொரி இரண்டும் கார்த்திகையின் பொழுது, கடலைக் கடைகளில் கிடைக்கும்.

கார்த்திகை மாதம் பெளர்ணமி நாளில் கார்த்திகை நட்சத்திரம் வருவதால் இம்மாதம் கார்த்திகை எனப்பெயர் பெற்றது. கார்த்திகை மீன் (மீன்-நட்சத்திரம்) ஆரல், இறால், அறுவாய், அளக்கர் எனவும் பெயர் பெறும். அறுமீன் என் இதற்கு ஒரு பெயர் உண்டு. ஆறுஉடுக்கள் (உடுக்கள்-நட்சத்திரங்கள்)ஒரே கூட்டமாகக் கூடியிருப்பதால் அது இப்பெயர் பெற்றது. சூரியன் கார்த்திகை நட்சத்திரத்தை குறுகும்போது அக்கினி நட்சத்திரம் ஆரம்பமாகும். கார்த்திகை நாளில் வரிசையாகத் திருவிளக்கேற்றி எங்கும் கொண்டாடும் வழக்கம் புராதன காலந்தொட்டு இருந்து வருகிறது
.
 களவழி நூல், ''கார்த்திகைச் சாற்றில் கழிவிளக்கைப் போன்றவை'' எனக் கூறுகின்றது. (சாறு-விழா)
'துளக்கில் கபாலீச் சரத்தான் தொல்கார்த்திகை நாள் விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்...  –சம்பந்தர்கார்த்திகை நாளில் மாலையில் விளக்கிடுவதைச் சிந்தாமணியில்,
'.......... குன்றில் கார்த்திகை விளக்கிட்டான்'' எனக் கூறும் பகுதியால் அறியலாம். கார்த்திகை விழாவைப் பற்றிப் பலர் பற்பலவிதமாகக் கூறுகிறார்கள்.
ஆயினும் கார்த்திகை விழாவின் உண்மை அப்பர் வாக்கால் உணரலாம்.
''இரு நிலனாய்த் தீயாகி  நீருமாகி இயமானனாய்
எரியுங் காற்றுமாகி
அருநிலைய திங்களாய் ஞாயிறாகி  ஆகாசமாய்
அட்டமூர்த்தி  ஆகிப்
பெருநலமும் குற்றமும் பெண்ணும் பிறருருவுந்தம்
உருவும் தாமேயாகி
நெரு நலையாய் இன்றாகி நாளையாகி
நிமிர் புன்சடையடிகள் நின்றவாறே..
அட்ட மூர்த்தங்களில் அக்கினி, சூரியன், சந்திரன், ஆன்மா, எனும் நான்கும் தீயின் அம்சமாகும். இறைவன் அழல் உருவினன்என்பதை,
''பாசுபதா பரஞ்சுடரே'' .......
''தழலுருவாம் சங்கரன்'' ........
'எரியலால் உருவமில்லை''.....            என்று தேவராம் மூலமும்,
''சோதியே சுடரே''..... [திருவாசம்,]                                    
அலகிற் சோதியன்...., [பெரிய புராணம்] -எனும் வாக்குகளால் அறியலாம்.

தீ அதனை அடைந்த பொருள்களின் அழுக்கைப் போக்கித் தன்மயமாக்கும். அதுபோல, இறைவன் உயிர்களின்  ஆணவ அழுக்கை அகற்றித் தன்மயமாக்குவான். தீ ஒன்றைப் பற்றி நின்று தோன்றுவதைப் போல இறைவனும் சிவஞானிகளின் அறிவில் தோன்றி விளங்குகிறான்.ஒரு விளக்கிலிருந்து பலவிளக்குகளை ஏற்றுவதைப் போல சிவத்திடம் இருந்து பல வடிவங்கள் தோன்றுகின்றன.சிவமாகிய ஒளியையோக நிலையாலேயே காணலாம். இது எல்லோருக்கும் எளிதான காரியமல்ல. 
அதனால் சரியையெனும் தாஸமார்கத்தில் ''தீதில் திருவிளக்கிட்டு'' என சித்தியாரிலும்,
விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறிஞானமாகும் எனத் தேவாரத்திலும் கூறுமாறு அநேக அடியார்கள்  ஆலயங்களில்திருவிளக்கிட்டு பேறு பெற்றுள்ளார்கள்.
யோக நெறியால் அன்றிக் காணமுடியாத தெய்வ ஒளியைக் கார்த்திகை நாளில் பலவித எரிகளை சிவ, விஷ்ணு ஆலயங்களில் முன் உண்டுபண்ணி அடியார்கள் அதனை இறைவனாக் கருதி வழிபட்டு வருகின்றனர். இறைவனும் அதனையேற்று அருள் புரிகிறார். இந்த அழல் வழிபாடு தரிசனம் திருவண்ணாமலையில் சிறப்பாகக் கொண்டாடப்பெற்று வருகின்றது.
அன்று அண்ணாமலை அழற் சோதி மலையாய், அருணாசலமாய், சோணகிரியாய் இலங்கும்.[அருணம், சோணம் - சிகப்பு நிறம்]

இம்மலை ஏறத்தாழ மூவாயிரம் அடி உயரத்தில் உள்ளது. கார்த்திகை அன்று மலைமேல் பெரிய பாத்திரம் ஒன்றில் நெய் ஊற்றி, எட்டு முழ வெள்ளை துணியை திரியாகயிட்டு ஏராளமான கற்பூரத்தை சொரிந்து விளக்கிடு செய்வார். இது பல மைல்களுக்கு அப்பால் பல நாட்கள் இச்சோதி ஒளிவீசும். இவ்வொளி இம்மலையை அடுத்து யாவும் செந்நிற சிகப்பு நிறம் பொருந்தி வண்ணமாய் ஒளிர்ந்திடும்தீபம் ஏற்றி வழிபட முடியாத இடங்களில் சிவ, விஷ்ணு ஆலயங்களின் முன்னர் பனையால் சொக்கப்பனை வேய்ந்து சுவாமியை எழுந்தருளப் பண்ணிச் சொக்கப்பனையைக் கொளுத்துவார்கள்.சொக்கப்பனை ஏக ஜோதிமயமாய் ஒளி வடிவினனாகிய இறைவனை உணர்த்தும். சொக்கப்பனை வணங்குவது சொக்கப் பனையாகும். சொக்கப்பனாகிய சிவனை ஒளி வடிவாகக் காண்பிப்பதால் இது சொக்கப்பனை எனப் பெயர் பெற்றது.பழந்தமிழ் நூலாகிய தொல்காப்பியத்தில், ''வேலின் நோக்கிய விளக்க நிலையும்'' என்பதற்குக் கார்த்திகை நாளில் ஏற்றிய விளக்கு என்பது பொருள். பண்டைக் காலம் தொட்டேகார்த்திகை விழா ஒரு பெரும் பண்டிகையாக நம்மவர்கள் இன்றும் கொண்டாடி வருகிறார்கள்.பழைய காலங்களில் மலைச்சிகரங்களில் விளக்கேற்றி விழா கொண்டாடி விருந்துண்டு, களிகொண்டு ஆடி களித்திருப்பதை சங்க நூற்களில் சான்று உண்டு.ஆகவே, மேற்கூறியதிலிருந்து கார்த்திகை விழா நமது  ஆணவ இருளைப் போக்கி ஞான ஒளியைப் பெருக்குவதற்கு உகந்த விழாவாகும் என்பது விளங்குகிறது


கார்த்திகை திருநாள் மிகவும் தொன்மை வாய்ந்த திருநாள், தமிழர்களால் பல்லாயிரம் ஆண்டுகளாகக் கொண்டாடப்படுகிறது. கி.மு 2500 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் இலக்கியங்களிலும் மற்றும் சங்க கால இலக்கியங்களிலும் கார்த்திகைத் தீபத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

இத்தீபத்திருநாள், திருவண்ணாமலையில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுவதால், இதை திருவண்ணாமலைத் தீபம் என்றும் அழைப்பார்கள். சிவபெருமான் ஒளி மயமாகக் காட்சியளித்ததை நினைவு கூரும் வகையில், தீபத்தினத்தன்று திருவண்ணாமலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். இந்த தீபம், ஐந்தரை அடி உயரமும், ஐந்தடி நீளமும் உள்ள ஒரு இரும்பு கொப்பரையில், 2000 கிலோ நெய்யை விட்டு, முப்பது மீட்டர் காடாத் துணியைச் சுருட்டி அதைத் திரியாகப் போட்டு அதன் மேல் இரண்டு கிலோ கற்பூரத்தை வைத்து ஏற்றப்படும். இந்த மகாதீபம் மலையைச்சுற்றி 35 கிலோமீட்டர் தூரம்வரை தெரியும்.

இத்திருநாள், முருகக்கடவுள் அவதரித்தத் தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

பெரும்பாலோனோர் காலை முதல் விரதமிருந்து, மாலை பூஜை முடிந்தபின்னர், அகல் விளக்கேற்றி வரிசையாக வாசல் தொடங்கி வீடு முழுவதும் வைப்பார்கள். நகர்புறங்களில் இட நெருக்கடி இருந்தாலும், பால்கனி, மொட்டைமாடி சுவர், மாடிப்படிகட்டுகள், சன்னல் விளிம்புகள் என்று எங்கெல்லாம் இடம் இருக்கிறதோ அங்கெல்லாம் விளக்கேற்றி வைப்பார்கள். பாரம்பரியமாக களிமண்ணால் செய்யப் பட்ட சிறு அகல் விளக்குகள்தான் ஏற்றி வைக்கப்படும். ஆனால் இப்பொழுது வேறுவகை விளக்குகளும், அலங்கார மெழுகுவத்திகளும் ஏற்றப்படுகின்றன.

இத்திருவிழாவின் இன்னொரு சிறப்பம்சம் "சொக்கப்பனை கொளுத்துதல்". கோவிலுக்கு அருகே, திறந்த வெளியில், ஒரு காய்ந்த மரத்துண்டை (அனேகமாக பப்பாளி மரத்தண்டு) நிறுத்தி அதனைச் சுற்றி காய்ந்த பனை மட்டைகளைக் கட்டி வைப்பார்கள். இதற்கு சொக்கப்பனை என்று பெயர். சாயங்காலப் பூஜை முடிந்து விளக்கேற்றிய பின்னர், கோவில் அர்ச்சகர் வெளியே வந்து, சொக்கப்பனைக்கு தீபாராதனைக் காட்டி அதைக் கொளுத்தி விடுவார். பனை மட்டையில் தீ பிடித்ததும் படபடவென்று ஒசையுடன் வெடித்துக் கொண்டே கொழுந்து விட்டு எரியும். இதற்கு புராணங்களில் வெவ்வேறு கதைகள் கூறப்பட்டிருந்தாலும், ஒருவேளை இதுதான் அந்நாளைய பட்டாசோ??

இதனால் தானோ இன்னமும் இத்திருநாளன்று சிறுவர்கள் பட்டாசு (பெரும்பாலும் தீபாவளிக்கு வாங்கியதில் மிச்சம் பிடித்தது) வெடித்து மகிழ்கிறார்கள்.

ஏற்றப்பட்ட விளக்குகள் அனைத்தும் தீயனவைகளைத் தடுத்து நல்லனவைகளைத் தரும் என்பது நம்பிக்கை. அகல் விளக்கோ அல்லது அழகிய சிறு மெழுகுவத்தியோ, இருண்ட மாலை வேளையில் வரிசை வரிசையாய் ஒளிரும் இத்தீபங்களைக் காண்பதே கொள்ளை அழகு.
இத்திருநாளில் ஏற்றப்படும் ஒவ்வொரு தீபமும் நம் வீட்டிற்கு மட்டுமின்றி அனைவர் வாழ்விலும் ஒளி பரவ செய்யட்டும்.

கார்த்திகை பௌர்ணமியன்று பூமிக்கு மிக அருகில் சந்திரன் வருகிறது. ஆகவே, அன்றைய தினம் மற்ற பௌர்ணமி தினத்தை விட நிலவின் ஒளி மிகப் பிரகாசமாக இருக்கும்.அன்றைய தினம் சிவசக்தி சமேதராய் பூமிக்கு மிக அருகே வந்து இறைவனும், இறைவியும் அருள்பாலிக்கின்றனர். கார்த்திகை பௌர்ணமி தினத்தன்று பெரும்பாலும் கார்த்திகை நட்சத்திரமும் இணைந்து வரக் காணலாம். கார்த்திகை, திருவோணம் ஆகிய இரு நட்சத்திரங்களும் நல்ல நட்சத்திர சக்தி தருவதால் இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் விரதங்கள் இருக்க வேண்டும் என்று இந்து மதம் கூறுகிறது.

சுபமான கார்த்திகை மாதத்தில், பிரகாசமான பௌர்ணமியில், நல்ல நட்சத்திர சக்தி கொண்ட கார்த்திகை நட்சத்திரம் இணைந்து வருவதால் இது "பெரிய கார்த்திகை" எனப்படுகிறது. எனவே, இவ்வளவு சிறப்புப் பெற்ற கார்த்திகை மாதத்தில் உள்ள விரத முறைகளை அனுஷ்டித்து வாழ்வில் வளம் பல பெறுவோமாக.

தெய்வங்களுக்குரியவையாக ஒவ்வொரு நட்சத்திரங்கள் திகழும். ஆனால், முருகப் பெருமானுக்கு மட்டும் இரண்டு நட்சத்திரங்கள் உகந்தவையாகும். விசாக நட்சத்திரமும், கார்த்திகை நட்சத்திரமும்தான் அந்த இரு நட்சத்திரங்கள். வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று பிறந்தவர் ஆகையால் விசாக நட்சத்திரம் முருகக் கடவுளுக்குரியதாயிற்று. 

சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளாகத் தோன்றிய சரவணப் பொய்கையில் குழந்தையாய் தவழ்ந்த முருகனை கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்ததால் கார்த்திகையும் முருகனுக்குரிய நட்சத்திரமாயிற்று. அதிலும் விருச்சிக மாதமாகிய கார்த்திகைத் திங்களில் பௌர்ணமியோடு கூடி வரும் கார்த்திகை நட்சத்திரம் முருக வழிபாட்டிற்கேற்ற ஒன்றாகும். கார்த்திகைத் தீபத் திருநாளன்று தீபங்கள் ஏற்றி முருகனை வழிபடுவது சிறந்தது. எனவே, கார்த்திகை நட்சத்திரத்தில் முருகப்பெருமானை விரதமிருந்து கார்த்திகேயனாக வழிபட நற்பேறுகள் யாவும் கிடைக்கப் பெறுவர். 

கார்த்திகை மாதம் பௌர்ணமியன்று சந்திரன் கிருத்திகை நட்சத்திரத்திலிருக்கும் போது கார்த்திகை விழா கொண்டாடப்படுகிறது. பஞ்சபூதங்களான நிலம், நீர், தீ, காற்று, வானம் இவைகளால் ஆனதே பிரபஞ்சம். அவற்றுள் நெருப்பை வழிபடுவதுதான் தீபத் திருவிழா.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படுவது இக்கார்த்திகை மாதத்தில்தான். தீபத் திருவிழா என்றதுமே நம் நினைவில் வந்து நிற்பது திருவண்ணாமலை திருத்தலம்தான். திருவண்ணாமலை கார்த்திகை தீபம் தமிழ்நாட்டில் நடைபெறும் மிகப் பெரிய உற்சவங்களில் ஒன்று. இவ்விழா பதினேழு நாட்களுக்கு பிரம்மோற்சவமாகக் கொண்டாடப்படுகிறது.

கார்த்திகை மாதத்தில் நாள்தோறும் சூரிய உதயத்தின்போது நீராடுபவர்கள் சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணிய பலனை அடைவார்கள்.
விஷ்ணு பகவானை கார்த்திகை மாதத்தில் புஷ்பங்களால் அர்ச்சித்து பூஜை செய்பவர்கள் தேவர்களும் அடைய அரிதான மோட்ச நிலையை அடைவார்கள்.
கார்த்திகை மாதத்தில் விஷ்ணு பகவானை துளசி இலையால் அர்ச்சனை செய்பவர்கள், பகவானுக்கு சமர்ப்பிக்கும் ஒவ்வொரு துளசி இலைகளுக்கும் ஒவ்வொரு அசுவமேதயாகம் செய்த பலனை அடைவார்கள்.
கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்பவர்கள் பிரம்ம ஹத்தி முதலான தோஷங்களிலிருந்தும் விடுபடுவார்கள். கார்த்திகை மாதத்தில் நாள்தோறும் இல்லங்களில் தீபங்களை ஏற்றி வழிபடுபவர்கள் புண்ணிய பலனை அடைவர்.
கார்த்திகை மாதத்தில் மது, மாமிசம் முதலானவைகளை ஒழித்து விரதம் அனுசரிப்பவர் சகல பாவங்களிலிருந்தும் விடுபட்டு விஷ்ணு பதத்தை அடைவார்கள். கார்த்திகை மாதத்தில் மாமிச ஆகாரத்தைக் கைவிடாதவர்கள் புழுப் பூச்சிகளாய் பிறவி எடுப்பார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது.

மாதங்களில் கார்த்திகை மாதம் மன உறுதி தரும் என்பது ஐதீகம். விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் இம்மாதத்தில் மனசேர்க்கை, உடல்சேர்க்கை, கர்ப்பதானம் ஆகிய இவற்றில் பிரச்சினைகள் வராது. எனவே, கார்த்திகை மாதத்தைத் "திருமண மாதம்" என்று இந்து சாஸ்திரம் கூறுகிறது.