கார்த்திகை மாதம் பெளர்ணமி நாளில் கார்த்திகை நட்சத்திரம் வருவதால் இம்மாதம் கார்த்திகை எனப்பெயர் பெற்றது. கார்த்திகை மீன் (மீன்-நட்சத்திரம்) ஆரல், இறால், அறுவாய், அளக்கர் எனவும் பெயர் பெறும். அறுமீன் என் இதற்கு ஒரு பெயர் உண்டு. ஆறுஉடுக்கள் (உடுக்கள்-நட்சத்திரங்கள்)ஒரே கூட்டமாகக் கூடியிருப்பதால் அது இப்பெயர் பெற்றது. சூரியன் கார்த்திகை நட்சத்திரத்தை குறுகும்போது அக்கினி நட்சத்திரம் ஆரம்பமாகும். கார்த்திகை நாளில் வரிசையாகத் திருவிளக்கேற்றி எங்கும் கொண்டாடும் வழக்கம் புராதன காலந்தொட்டு இருந்து வருகிறது
.
 களவழி நூல், ''கார்த்திகைச் சாற்றில் கழிவிளக்கைப் போன்றவை'' எனக் கூறுகின்றது. (சாறு-விழா)
'துளக்கில் கபாலீச் சரத்தான் தொல்கார்த்திகை நாள் விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்...  –சம்பந்தர்கார்த்திகை நாளில் மாலையில் விளக்கிடுவதைச் சிந்தாமணியில்,
'.......... குன்றில் கார்த்திகை விளக்கிட்டான்'' எனக் கூறும் பகுதியால் அறியலாம். கார்த்திகை விழாவைப் பற்றிப் பலர் பற்பலவிதமாகக் கூறுகிறார்கள்.
ஆயினும் கார்த்திகை விழாவின் உண்மை அப்பர் வாக்கால் உணரலாம்.
''இரு நிலனாய்த் தீயாகி  நீருமாகி இயமானனாய்
எரியுங் காற்றுமாகி
அருநிலைய திங்களாய் ஞாயிறாகி  ஆகாசமாய்
அட்டமூர்த்தி  ஆகிப்
பெருநலமும் குற்றமும் பெண்ணும் பிறருருவுந்தம்
உருவும் தாமேயாகி
நெரு நலையாய் இன்றாகி நாளையாகி
நிமிர் புன்சடையடிகள் நின்றவாறே..
அட்ட மூர்த்தங்களில் அக்கினி, சூரியன், சந்திரன், ஆன்மா, எனும் நான்கும் தீயின் அம்சமாகும். இறைவன் அழல் உருவினன்என்பதை,
''பாசுபதா பரஞ்சுடரே'' .......
''தழலுருவாம் சங்கரன்'' ........
'எரியலால் உருவமில்லை''.....            என்று தேவராம் மூலமும்,
''சோதியே சுடரே''..... [திருவாசம்,]                                    
அலகிற் சோதியன்...., [பெரிய புராணம்] -எனும் வாக்குகளால் அறியலாம்.

தீ அதனை அடைந்த பொருள்களின் அழுக்கைப் போக்கித் தன்மயமாக்கும். அதுபோல, இறைவன் உயிர்களின்  ஆணவ அழுக்கை அகற்றித் தன்மயமாக்குவான். தீ ஒன்றைப் பற்றி நின்று தோன்றுவதைப் போல இறைவனும் சிவஞானிகளின் அறிவில் தோன்றி விளங்குகிறான்.ஒரு விளக்கிலிருந்து பலவிளக்குகளை ஏற்றுவதைப் போல சிவத்திடம் இருந்து பல வடிவங்கள் தோன்றுகின்றன.சிவமாகிய ஒளியையோக நிலையாலேயே காணலாம். இது எல்லோருக்கும் எளிதான காரியமல்ல. 
அதனால் சரியையெனும் தாஸமார்கத்தில் ''தீதில் திருவிளக்கிட்டு'' என சித்தியாரிலும்,
விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறிஞானமாகும் எனத் தேவாரத்திலும் கூறுமாறு அநேக அடியார்கள்  ஆலயங்களில்திருவிளக்கிட்டு பேறு பெற்றுள்ளார்கள்.
யோக நெறியால் அன்றிக் காணமுடியாத தெய்வ ஒளியைக் கார்த்திகை நாளில் பலவித எரிகளை சிவ, விஷ்ணு ஆலயங்களில் முன் உண்டுபண்ணி அடியார்கள் அதனை இறைவனாக் கருதி வழிபட்டு வருகின்றனர். இறைவனும் அதனையேற்று அருள் புரிகிறார். இந்த அழல் வழிபாடு தரிசனம் திருவண்ணாமலையில் சிறப்பாகக் கொண்டாடப்பெற்று வருகின்றது.
அன்று அண்ணாமலை அழற் சோதி மலையாய், அருணாசலமாய், சோணகிரியாய் இலங்கும்.[அருணம், சோணம் - சிகப்பு நிறம்]